Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கவயலில் நூறாண்டு பழமையான சுரங்கபாலம் பயன்படுத்த தடை: ரயில்வே துறை எச்சரிக்கை

தங்கவயல்: தங்க வயலில் நூறாண்டை கடந்த பழுதடைந்த நிலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனை மீறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. கடந்த 1894ம் ஆண்டு மைசூரு அரசு இருந்தபோது, அப்போதைய மெட்ராஸ் ரயில்வே கம்பனியால் பங்காரு பேட்டையில் இருந்து மாரிகுப்பம் வரை கோரமண்டல், உரிகம், சாம்பியன், மாரிகுப்பம் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

அதில் 1914ம் ஆண்டு கோரமாண்டல் ரயில் நிலையத்தில் இருந்து, உரிமம் ரயில் நிலையத்துக்கு இடையில், டாங்க் பிளாக் சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ரயில்வே (அண்டர் பாஸ்) சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சுரங்கப்பாலம், பொது மக்களின் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. ஆனால் சுரங்கப்பாலத்தின் கூரையில் விரிசல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்துள்ளது. இதையொட்டி, சுரங்கப்பாலத்தை பயன்படுத்த கூடாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ரயில்வே நிர்வாகம் சுரங்க பாலத்தின் அருகே அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளது.அதில், இது நீர்வழிப் பாலம், இதை‌ பொதுப் பாதையாக பயன்படுத்துவது பாதுகாப்பற்றது. அதனால் இதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1989 ரயில்வே சட்டம் பிரிவு 147ன் படி தடையை மீறுவது 6 மாதங்கள் வரை சிறை தண்டனைக்குரிய குற்றம் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலித் ரக்சன வேதிகே சங்க தலைவர் அன்பரசன், வெளியிட்டுள்ள அறிக்கையில், நூற்றாண்டுகளை கடந்த இந்த பழமையான சுரங்கப்பாலம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ரயில்வே நிர்வாகமும், இதுபற்றி எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இந்த பாலத்தில் செல்ல வேண்டாம். ரயில்வேதுறை மாரி குப்பம், சாம்பியன், உரிகம் ஆகிய நிலையங்களின் அருகே சுரங்க பாதைகளை அமைத்தது போல், உடனடியாக இந்த சுரங்க பாலத்தை புனரமைப்பு செய்து, பொது மக்களின் போக்குவரத்துக்கு வழி வகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.