Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வந்த ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்: புதுவை மாநில பயணிக்கு வலை

மீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலமாக சென்னை சர்வதேச விமான முனையத்துக்கு பயணி மூலம் கடத்தி வரப்பட்டு, விமான நிலையத்தின் கன்வேயர் பெல்ட்டில் அனாதையாக கிடந்த சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இச்சோதனையில், அந்த சூட்கேசுக்குள் ரூ.7 கோடி மதிப்பிலான ‘ஹைட்ரோபோனிக்’ எனும் உயர்ரக கஞ்சா கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவான புதுவை மாநில பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று அதிகாலை சென்னை விமானநிலையத்தின் சர்வதேச விமான முனையத்துக்கு தாய் ஏர்வேஸ் விமானம் வந்து சேர்ந்தது. முன்னதாக, இந்த விமானத்தில் வரும் ஒரு பயணியின் சூட்கேசில் போதைபொருள் இருப்பதாகவும், அந்த சூட்கேசை அடையாளக் குறியிட்டு அனுப்பியுள்ளதாகவும், கன்வேயர் பெல்ட்டில் வரும் சூட்கேசை எடுக்க வரும் பயணியை பிடித்து விசாரிக்கும்படி இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தாய்லாந்து அதிகாரிகள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, புதுடெல்லியில் உள்ள ஒன்றிய சுங்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல தெரிவித்தனர். அதன்பேரில், நேற்று அதிகாலை சென்னை வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கன்வேயர் பெல்ட்டில் வரும் அப்பயணிகளின் சூட்கேஸ்களையும கண்காணித்தனர். இதற்கிடையே, கன்வேயர் பெல்ட்டில் வந்த அனைத்து சூட்கேஸ்களையும் பயணிகள் எடுத்து சென்ற பிறகு, ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் எடுக்கப்படாமல் அனாதையாக கேட்பாரற்ற நிலையில் கிடப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து கன்வேயர் பெல்ட் பகுதிக்கு சுங்கத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று, அங்கு அனாதையாக கிடந்த அடையாளக் குறியிட்ட சூட்கேசை திறந்து சோதனை செய்தனர். அதற்குள், ரூ.7 கோடி மதிப்பில் 14 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட உலகிலேயே மிக உயர்ரக கஞ்சாவான ‘ஹைட்ரோபோனிக்’ கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இது, வெளிநாடுகளில் தரையில் வளராமல், தண்ணீரிலே மிதந்துகொண்டு வளரும் தன்மை உடையது. அந்த சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதன் டேக்கில் இருந்த முகவரி குறித்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அந்த சூட்கேஸ் புதுவை மாநிலத்தை சேர்ந்த ஒரு பயணியுடையது எனத் தெரியவந்தது.

முன்னதாக, தாய்லாந்து நாட்டிலிருந்து ரூ.7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த புதுவை மாநில கடத்தல் ஆசாமிக்கு, சென்னை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து, தன்னை கையும் களவுமாக பிடிக்க தயார்நிலையில் காத்திருக்கின்றனர் என ஏற்கெனவே தெரியவந்திருக்கிறது. இதனால் அந்த சூட்கேசை சென்னை விமான நிலையத்திலேயே அனாதையாக விட்டுவிட்டு புதுவை மாநில கடத்தல் ஆசாமி தப்பியோடி விட்டார் என்பது சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வாக்குப்பதிவு செய்து, விமான நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இதுபற்றி சென்னை விமானநிலைய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்து, கஞ்சா கடத்தி வந்து தப்பியோடிய புதுவை மாநில கடத்தல் ஆசாமியை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.