Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன்(திமுக) பேசுகையில், கும்பகோணம் தொகுதி, கும்பகோணம் ஒன்றியம், மானம்பாடி, நாகநாதசுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா என கேட்டார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், உறுப்பினர் கோரிய திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டுமென ஏற்கனவே நிதி அமைச்சரும், உயர் கல்வித்துறை அமைச்சரும் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள்.

இந்த திருக்கோயிலானது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில் என்பதால் பணிகள் மேற்கொள்ளவதற்கு அனைத்து மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி மேற்கொள்ள வருகின்ற 11ம் தேதி பணிகள் தொடங்கப்படும். க.அன்பழகன்: மானம்பாடி நாகநாதசுவாமி திருக்கோயில் கும்பகோணம்-சென்னை சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம், அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் இக்கோயிலும் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது, இந்த திருக்கோயில் மூன்று துறைகளின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு இன்றும் திருப்பணி நடைபெறாமல் உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் உடனடியாக இந்த ஆண்டு திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்வாரா?

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 2022-2023ம் ஆண்டில் ரூ.100 கோடி, 2023-2024ம் ஆண்டில் ரூ.100 கோடி, 2024-2025 100 கோடி என்று ரூ.300 கோடியை 1,000 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களால் கட்டப்பட்டு போற்றி பாதுகாக்கப்பட்ட பொக்கிஷமான கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நிதியை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆட்சியின் நீட்சியாக இந்த ஆண்டும் கூடுதலாக நிதியினை வழங்க முதல்வர் ஒப்புதல் தந்திருக்கின்றார். ஒட்டுமொத்தமாக 507 கோயில்களை ஆவணப்படுத்தி இருக்கின்றோம். தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சி இருக்கின்ற போதே இந்த அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்படும் என்பதை அறுதியிட்டு உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.