திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் ஊழியர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணையில் உயிரிழந்தார். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவபிரகாசம், எஸ்எஸ்ஐ சிவக்குமார், பாரா போலீஸ் இளையராஜா மற்றும் கோயில் ஊழியர்கள், கோயில் அருகே கடை வைத்துள்ள வியாபாரிகள், அஜித்குமாரிடம் விசாரணை செய்த தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், அய்யனார், அஜித்தின் தாயார் மாலதி, தம்பி நவீன் குமார், சித்தி ரம்யா, திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்பட பலரிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை செய்தார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த 8ம் தேதி ஐகோர்ட் கிளையில் அவர் சமர்ப்பித்தார்.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையும் இவ்வழக்கை ஜூலை 15ம் தேதியில் இருந்து சிபிஐ விசாரணை செய்து, ஆக.20ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பிஎன்எஸ் 103 பிரிவின் கீழ் கொலை வழக்காக சிபிஐ நேற்று வழக்கு பதிந்து விசாரணையை துவங்கியது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி மோகித் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். சிபிஐயிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்து நகை திருட்டு போனது உண்மையா? நிகிதாவுக்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? ஊழியர் கொலையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.