Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயில் அருகே தனியாக தூங்கி கொண்டிருந்த 85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்த 5 போதை வாலிபர்கள்

சென்னை: பாண்டிபஜார் பகுதியில் கோயில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த 85 வயது மூதாட்டிக்கு குடிபோதையில் பாலியல் தொந்தரவு செய்த 5 வாலிபர்களில் 2 பேரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாண்டிபஜார் ஆர்.கே.புரம் அம்மன் கோயில் லேன் பகுதியில் 85 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீடு வீடாக பால் பாக்கெட் போட்டு வருகிறார். வழக்கமாக ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே தூங்குவது வழக்கம். அதன்படி கடந்த 4ம் தேதி அம்மன் கோயில் அருகே படுத்திருந்தார்.

அப்போது தி.நகரில் அரசியல் பிரமுகருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்றில் பணியாற்றும் ரமேஷ்(25), ராமராஜம்(31) உள்ளிட்ட 5 பேர் குடிபோதையில், தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் 5 ஓட்டல் ஊழியர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மூதாட்டி வெயியே சொல்ல முடியாமல் வேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையே மூதாட்டி நேற்று வழக்கம் போல் அம்மன் கோயில் அருகே தூங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த ரமேஷ் மற்றும் ராமராஜம் ஆகியோர் மீண்டும் மூதாட்டியிடம் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் மூதாட்டி உதவி கேட்டு அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.

உடனே அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு, மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரமேஷ், ராமராஜம் ஆகியோரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் ரமேஷுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. ராமராஜம் பொதுமக்கள் அடி தாங்க முடியாமல் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த பாண்டிபஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து ரமேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து மூதாட்டி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலியல் புகார் என்பதால் பாண்டி பஜார் போலீசார் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அதன்படி மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரேணுகா தேவி விசாரணை நடத்திய போது, தி.நகரில் அரசியல் பிரமுகருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்றில் பணியாற்றும் 5 பேர் நள்ளிரவில் தனியாக இருந்த மூதாட்டிக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து காயப்படுத்தி தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்ற 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் அப்பகுதி மக்கள் மூதாட்டிக்கு தொந்தரவு கொடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாண்டி பஜார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.