கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ரூ.198.65 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை
சென்னை: கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ரூ.198 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி கூறியதாவது:
தேசத்துக்கு சொந்தமான சொத்துக்களை திருடுபவர்கள் மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதனால், இந்த நீதிமன்றம் முன்வந்துள்ளது. ஒருசில பேராசைக்காரர்களால் தேசத்தின் சொத்தை அபகரிப்பதை ஏற்க முடியாது.
எனவே, இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கோயில்களின் சொத்துக்களில் உள்ள கனிம வளங்களை சட்டவிரோதமாக திருடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு சேலம் சரக காவல்துறை டிஐஜிக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த கனிம வள திருட்டு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை, எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து வரும் 26-ம் தேதி சேலம் சரக காவல்துறை டிஐஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.