சென்னை:தமிழகத்தில் தற்போது கிழக்கு திசை காற்றின் காரணமாக குளிர் வாட்டிவ ருகிறது. 23ம் தேதிக்கு பிறகு இந்த காற்று விலகும் என்பதால், மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது வெப்பநிலை குறைந்துள்ளதால் குளிர் அதிகரித்துள்ளது. நீண்டகாலத்துக்கு பிறகு வட தமிழகத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ளதால் குளிரின் தாக்கம் இருக்கிறது.
குறிப்பாக உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் 10 டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சென்றுவிட்டதால் அங்கு உறைபனி நிலவுகிறது. மேலும் ஓசூர், தேன்கனிக்கோட்டை,சூளகிரி, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட வெப்பம் அதிகமாக காணப்படும் பகுதிகளிலும் கூட தற்போது 17 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிட்டதால் அங்கும் கடும் குளிர் வாட்டுகிறது.
சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை பொருத்தவரையில் கும்முடிப்பூண்டி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளி் 21 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிட்டது. அதனால் இங்கும் இரவில் கடும் குளிர் மற்றும் காலையில் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு 21 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுள்ளது.
வடக்கு திசையில் இருந்து தென்பகுதியை நோக்கி குளிர் காற்று வீசுவதன் காரணமாகவும், கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதாலும் 23ம் தேதி வரை கடும் குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. 23ம் தேதிக்கு பிறகு மேற்கண்ட குளிர் காற்று விலகும் என்றும் எதிர்பார்்க்கப்படுவதால் வடக்கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


