Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமங்கலம் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி: கை, கால்கள் முறிந்து தீவிர சிகிச்சை

அண்ணாநகர்: திருமங்கலம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், கை, கால்கள் முறிந்து தீவிர சிகிச்சை பெறுகின்றார்.சென்னை திருமங்கலம் மேம்பாலத்துக்கு இன்று அதிகாலை சுமார் 6.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். பின்னர் அவர் அங்கு நின்றபடி, “நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’’ என்று பயங்கரமாக சத்தம் போட்டுள்ளார். இதனால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில வாகன ஓட்டிகள் அருகே சென்று கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவற்றை அந்த இளைஞர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றே கூறிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர், ‘’இந்த உலகத்தில் வாழ விருப்பமில்லை’’ என்று கத்திக்கொண்டே மேம்பாலத்தில் இருந்து குதித்துவிட்டார்.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சென்று பார்த்தபோது கை, தலை மற்றும் கால் முறிந்து ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போலீசார் வந்து அந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு நடத்திய விசாரணையில், அந்த வாலிபரின் சொந்த ஊர் வந்தவாசி என்று தெரியவந்துள்ளது. திருமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் தெரியவில்லை. எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.