Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி: மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3, ஆதித்யா எல்-1 ஆகிய விண்வெளி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற பெரிய திட்டங்களை ஒரு பக்கம் செயல்படுத்தினாலும் ராணுவ பாதுகாப்பு, வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செயற்கைகோள்களை ஏவி வருகிறது. அந்த வகையில் நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ ரிசாட்- 1பி ரேடார் இமேஜிங் செயற்கைகோளை உருவாக்கியது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரோ எல்லை கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட் 1பி-ஐ செலுத்ததிட்டமிட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் சுமார் 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பரந்த நிலப்பரப்பில் நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். அத்துடன், அனைத்து வானிலை தரவுகளை விண்வெளியில் இருந்து உடனுக்குடன் அனுப்பும் திறன்களை இந்த செயற்கைகோள் கொண்டிருந்தது.

மேலும் ராணுவ பாதுகாப்புக்கு தேவையான கண்காணிப்பு பணிகளை இதன் வாயிலாக மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனுடன் பேரிடர் மேலாண்மை, விவசாயம் மற்றும் வன பாதுகாப்புக்கும் இந்த நுட்பம் பயன்படும். ஏற்கெனவே அனுப்பப்பட்ட ரிசாட் 1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட போது ராக்கெட்டின் மூன்றாம் கட்டத்தில் குறைபாடு ஏற்பட்டு தோல்வியடைந்துள்ளது. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து சென்ற பி.எஸ்.எல்.வி.-சி-61 ராக்கெட்டில் 2 அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில் மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.