Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடவுள் தேசத்தின் கண்ணீர்

கடவுள் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் இன்று கண்ணீர் தேசமாக மாறி நிற்கிறது. வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட துயரம் இன்று தேசத்தின் துயராக எட்டி உள்ளது. அதிகாலை பெய்த மழை, அதை தொடர்ந்து நிலச்சரிவு, மண்ணில் புதையுண்ட வீடுகள், அதில் சிக்கி உயிர்விட்ட உறவுகள் என்று அத்தனையும் கண்ணீரை வரவழைக்கும் சோக காட்சிகள். இயற்கையின் பாதிப்புதான். எதுவும் செய்ய முடியாததுதான். ஆனால் நடந்து முடிந்துள்ள சோகம் சிந்திக்க முடியாத அளவுக்கு மிகவும் கொடூரம்.

வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தான் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா - முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அட்டமலா, நூல்புழா, முண்டக்கை பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. வெள்ளரி மலைப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்று வெள்ளத்தில் முழுவதுமாக அடித்துச்செல்லப்பட்டுள்ளது. அங்கு பள்ளி இருந்த சுவடே தெரியவில்லை. மேலும் ஒரு பள்ளி மண்ணில் முழுவதுமான புதைந்து விட்டது. வயநாடு முழுவதும் மரண ஓலம் கேட்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம் உள்ளிட்ட அத்தனை பிரிவினரும் களம் இறங்கி உள்ளனர். மீட்பு பணிகளை மேற்பார்வையிட ஐஏஎஸ் அதிகாரி சீரம் சாம்ப சிவராஜ் என்பவரை கேரள அரசு நியமனம் செய்து உள்ளது.

வயநாடு எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி. ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக்கொண்ட அவர், தற்போது வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டார். அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அவரது தங்கை பிரியங்கா அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். வயநாட்டில் நடந்த இந்த துயர சம்பவம் ராகுல்காந்தியை உலுக்கி விட்டது. மக்களவையில் இந்த பிரச்னை பற்றி பேசிய அவர், ஒன்றிய அரசின் உதவியையும் நாடினார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனையும் தொடர்பு கொண்டு பேசி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வரை தொடர்பு கொண்டு இயற்கை பேரிடர் குறித்து தனது வருத்தத்தையும், பலியானவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து உள்ளார். அதோடு கேரள அரசுக்கு துணையாக பணியாற்ற தமிழ்நாட்டில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்பு குழுவையும் அனுப்ப உத்தரவிட்டுள்ளதுடன், கேரள அரசுக்கு தமிழ்நாடு முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இன்னும் தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, காவல்துறையினரையும் கேரளாவுக்கு அனுப்பி இந்த இக்கட்டான தருணத்தில் கேரளா பக்கம் நிற்பதை உறுதி செய்து இருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். வயநாட்டின் ஒருபகுதி முற்றிலும் சிதைந்து விட்டது. இந்த தருணத்தில் தேசம் அந்த பகுதி மக்களுடன் இருப்பதை உறுதி செய்வதே, அந்த மக்களின் கண்ணீரை துடைக்க வழிவகுக்கும்.