Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இனி ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்க முடியாது டாஸ்மாக் மதுக்கடைகளில் 12,000 பில்லிங் மெஷின்கள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மெஷின் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டில் நேற்று வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 2,000 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குற்றம் சாட்டுவது சரியல்ல. எப்படி 2,000 பேரை சாட்சிகளாக சேர்க்க முடியும்?

அதேபோல அவர் தொடர்ந்து ரூ.5,600 கோடி டாஸ்மாக் மூலமாக மேலிடத்துக்கு செல்கிறது என குற்றம்சாட்டி வருகிறார். என்னிடம் முழு ஆதாரம் உள்ளது. ஒரு ரூபாய் கூட ஊழல் நடைபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் தவறு செய்திருக்கலாம். அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது கூட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,000 ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதிலும் 541 ஊழியர்கள் மீது, அவர்கள் செய்த தவறின் காரணமாக ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மெஷின்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இனி ஒரு ரூபாய் கூட கடைகளில் அதிகமாக வாங்க முடியாது. தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களை கவுன்சிலிங் மூலமாக பணி இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்யப்பட்டு மீண்டும் ரூ.20 கொடுத்து அந்த பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு மது கடைகள் தனியாரிடம் உள்ளன. அங்கு கடைகளும் குறைவு. அதனால் அது சாத்தியப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்கனவே 500 மது கடைகள் மூடப்பட்டன. மேலும் பல கடைகளை மூடுமாறு கோரிக்கைகள் வருகின்றன. அதை பரிசீலிப்போம். உடனடியாக மூடுவது என்பது பல பிரச்னைகளை உருவாக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.