Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சையில் அறுவடை செய்த வயல்களில் வாத்து மேய்க்கும் பணி மும்மரம்

*இயற்கை உரத்திற்காக விவசாயிகள் ஏற்பாடு

தஞ்சாவூர் : தஞ்சையில் அறுவடை செய்த வயல்களில் வாத்துமேய்க்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.தஞ்சை மாவட்டம் சூலியகோட்டை பகுதியில் கோடை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விட்டுள்ளனர். இதன் மூலம் இயற்கை உரம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறினர்.தஞ்சை மாவட்டம் சூலியகோட்டை, சலியமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை அறுவடை முடிந்துள்ளது. இந்த வயல்கள் தற்போது சேறும், சகதியுமாக உள்ளது. இந்த வயல்களில் பெரிதும், சிறியதுமாக ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன.

வாத்து இறைச்சிக்கு பெரியளவில் கிராக்கி இல்லை. இருப்பினும் வாத்து முட்டைகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கேரளாவில் வாத்து முட்டைகளுக்கு சந்தை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த வாத்துகளுக்கு ஒரேஇடத்தில் வைத்து தீவனமிடுவது என்பது பெரிய அளவில் செலவை ஏற்படுத்தும் என்பதால் அறுவடை முடிந்த வயல்களில் சிதறிய நெல்மணிகள், புழுக்கள், பூச்சிகள் வாத்துக்களுக்கு நல்ல இரை கிடைக்கும்.

இதற்காக வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய்ச்சலுக்காக வந்துள்ளன. தற்போது கோடை அறுவடை முடிந்து அடுத்தகட்டமாக சம்பா சாகுபடிக்கு வயலை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வயல்களில் நீர்தேக்கி உழுவதற்கு தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே சாகுபடி செய்த நெல்மணிகள் வயலுக்குள் சிதறிக்கிடப்பதால் வாத்துகளுக்கான உணவுகள் இப்பகுதியில் அதிகம் கிடைக்கிறது. இதனால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான வாத்துகளுடன் மேய்ச்சலுக்காக தஞ்சை பகுதிக்கு வந்துள்ளனர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் சூலியகோட்டை பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகளை மேய விட்டுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: முட்டை வியாபாரத்துக்காக மட்டும் தான் நாங்கள் வாத்து வளர்க்கிறோம். 2.½ வயதான பிறகு வாத்துகள் முட்டை விடுவது குறைந்து விடும். அந்த வாத்துகளை மட்டும் கறிக்காக விற்பனை செய்து விடுவோம். வாத்துக்களை ஆயிரக்கணக்கில் வளர்த்தால் தான் முட்டைகள் அதிகம் கிடைத்து லாபம் வரும்.

ஒரே இடத்தில் வைத்து வாத்துகளை வளர்த்து அதற்கு தீவனம் போடுவது என்பது முடியாத காரியம். செலவும் மிக அதிகம். அதனால் ஊர் ஊராக சென்று அறுவடை முடிந்த நெல் வயல்களில் வாத்துகளை மேய்க்கிறோம். இந்த நிலத்தில் வாத்துக்கு தேவையான தண்ணீர், நெல், பூச்சின்னு அனைத்தும் இருக்கும். நாங்களும் குடும்பத்துடன் வந்து இங்கேயே கூடாரம் அமைத்து தங்கி வாத்துகளை மேய்ப்போம். வாத்துகள் மேய்வதால் அதன் எச்சங்கள் வயலுக்கு இயற்கை உரமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.