தமிழ்நாட்டில் வாழும் யாதவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி உள்இடஒதுக்கீடு வேண்டும்: கோகுல மக்கள் கட்சி வலியுறுத்தல்
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 315வது பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள சிலைக்கு கோகுல மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களான யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காததால் 1989 முதல் போதிய இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளனர். சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவரவருக்குரிய விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுவரை தமிழ்நாட்டில் வாழும் யாதவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழகத்திலேயே மிகவும் அடித்தட்டில், கால்நடை வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வசித்து வரும் மக்களுக்கு அதனுடைய மேச்சக்கால் புறம்போக்கு நிலங்களையும், அதற்குண்டான நீர்நிலைகளையும் அரசு பாதுகாத்து இச்சொத்துகளை தனி நலவாரியம் அமைத்து பராமரிக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஒரு மாட்டுத் தொழுவம் அமைத்து அதற்குண்டான மானிய விலையில் தீவனம், கால்நடைகளை பராமரிக்க போதிய இடங்கள் உருவாக்கி தர வேண்டும். தமிழகத்தில் இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வியில் முன்னேற முடியாத யாதவ சமுதாய மக்களுக்கு இன்றைய சூழ்நிலையை கருதி சிறப்பு சலுகையாக அச்சமூகத்திற்கு உயர் பதவிகளான தேர்வாணை குழு உறுப்பினர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், துணைவேந்தர்கள் பதவியில் முன்னுரிமை வழங்க தமிழக முதல்வர் துணை புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.