தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடந்தால் சட்ட ரீதியாக களத்தில் திமுக இருக்கும்: சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி
சென்னை: திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் மாநிலத்தில் நடக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என நாடே பார்த்துக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பதில் என்ன முக்கியம் என்றால், முதலில் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு படிவத்தை நிரப்பித் தர வேண்டும்.
அப்போதுதான் அவர் வாக்காளர் ஆக முடியும். இரண்டாவது, உங்களுடைய பெயர் 2003 வாக்காளர் பட்டியலில் இருந்தது என்றால், நீங்கள் வெறும் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும். அவருடைய குழந்தைகள் அந்த வாக்காளர் பட்டியலுடைய நகலை எடுத்து படிவத்தை நிரப்பி தந்தால் போதும். அப்படி இல்லாதவர்கள் அனைவரும் இருப்பிட சான்றிதழையும் பிறப்பு சான்றிதழையும் தர வேண்டும். இந்தச் சான்றிதழ்கள் எத்தனை மக்களிடம் இருக்கும், எத்தனை சாதாரண மக்களிடம் இருக்கும், அடித்தட்டு மக்களிடம் இருக்கும்.. இதுதான் மிகப்பெரிய கேள்வி.
ஒன்றிரண்டு இறந்த வாக்காளர்களை நீக்குவது, இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்களை நீக்குவது, இடம்பெயர்ந்த வாக்காளர்களை நீக்குவது என்பது நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, பாகநிலை அலுவலர், அதாவது பிஎல்ஓ என்று சொல்லக்கூடிய அந்த அலுவலர் தான் போய் வீடு வீடாகப் பார்க்க போகிறார். அவர்கள் முறையாக அந்தப் பணியை செய்வதில்லை என்பது தான் இந்தியா கூட்டணியுடைய மிகப் பெரிய புகார். வீடு வீடாக சென்று யார் யார் இறந்திருக்கிறார்கள், யார் யார் இரட்டை பதிவு வாக்கு வைத்திருக்கிறார்கள் என்ற கணக்கீடை ஒழுங்காக எடுப்பதில்லை. எனவே தான் இத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.
இந்த பணி தமிழ்நாட்டில் நடக்கும்போது இதுபோன்ற முறைகேடுகள் நடக்கக்கூடாது. வீடு வீடாக சென்று பார்ப்பது என்றால், பாகநிலை அலுவலர் உண்மையிலேயே வீடு வீடாகச் செல்ல வேண்டும். அதற்கான கணக்கீடுகளை எடுக்க வேண்டும். கணக்கீடுகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய பாகநிலை முகவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றாமல் நடந்தது தான் பீகார் வாக்காளர் திருத்த பட்டியல். அதுபோன்று தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது. நடக்கக்கூடாது என்பது தான் எங்களுடைய கோரிக்கை.
தமிழகத்திலும் நிச்சயமாக வாக்காளர் திருத்த பட்டியலை நாங்கள் கேட்டிருக்கின்றோம். தமிழகத்தில் நடத்த வேண்டும் என்றால், இங்கே இருக்கக்கூடிய 6 கோடி 34 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு மாதம் கொடுத்தால் போதாது. அவர்கள் உரிய ஆவணங்களை பெறுவதற்கும் படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்போம். 2026 சட்டமன்ற தேர்தலை, தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நியாயமா நடத்துமா என்பது உண்மையிலேயே சந்தேகத்திற்குரியது தான். ஆனால் திமுக அடிமட்ட தொண்டர்களில் இருந்து தலைமைக் கழகம் வரை இதில் உறுதியாகக் களத்திலிருந்து போராடுவதால் அந்த முறைகேடுகளை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.