* வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ம் தேதி வெளியீடு, எத்தனை லட்சம் பேர் நீக்கம் என்பது தெரியவரும்
சென்னை: எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் எத்தனை லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படும் என்பது தெரியவரும். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி முதல் எஸ்ஐஆர் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடந்த மாதம் நவம்பர் 4ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர்.
மேலும் படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெற்றது. தொடர்ந்து வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் இந்திய தேர்தல் ஆணைத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை ஒரு வாரம் நீட்டித்தது. அதாவது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பி ஒப்படைக்க, டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது.
எஸ்ஐஆர் பணிகளுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரளா எதிர்ப்பு தெரிவித்ததால், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. தொடர்ந்து 11ம் தேதி வரை எஸ்ஐஆர் படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது. அன்றைய தினம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த காலக்கெடு முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அன்றைய தினம் 2வது முறையாக படிவங்களை திருப்பி வழங்குவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டது. அதாவது 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் 2 முறை வழங்கிய கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்பவும் பெற்று விட்டனர். இந்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர். தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் 19ம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும் போது தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகரான சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் வரை நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றன. அதாவது இறந்தவர்கள் 25 லட்சம், இடம் மாறியவர்கள் 40 லட்சம், இரட்டை பதிவு 5 லட்சம் என 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் எஸ்ஐஆர் பணி முடிந்து தேர்தல் ஆணையம் வெளியிடும் வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருந்தால், திமுக சட்டபூர்வமாக மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெற்று தரும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


