ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை துவங்கி 22 நாளில் திமுக உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியது: குடும்பம் குடும்பமாக இணைந்து வருகின்றனர்
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை துவங்கி 22 நாளில் திமுக உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியுள்ளது. நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இதை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் கண்காணித்து வருகிறார்.
இதுகுறித்து, அடிக்கடி மாவட்ட செயலாளர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போதும் கூட மக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் முறையாக வந்து சேர்கிறதா என பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்து வருகிறார். மேலும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார்.
திமுகவினரின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
அண்மையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ஒன்றிய பாஜ அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.
அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை எனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம்” என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே பிரசாரம் தொடங்கப்பட்ட 22 நாட்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதுகுறித்து திமுக சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘‘ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
* ‘‘ஒன்றிய பாஜ அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.