சென்னை: திட்டமிட்டபடி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் நாளை நடைபெறும் என அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
இதற்கிடையே அன்புமணி தன்னுடைய பெயரை பயன்படுத்த கூடாது என ராமதாஸ் தடாலடியாக அறிவித்திருந்தார். ஆனால் அன்புமணி தொடர்ந்து தனது பெயரில் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் வரும் 10ம் தேதி பூம்புகாரில் நடக்க உள்ள மகளிர் மாநாட்டுக்கான வேலைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தொண்டர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி நாளை(25ம் தேதி) முதல் நவம்பர் 1ம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது. அன்புமணி மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த இலட்சினையை அன்புமணி நேற்று வெளியிட்டார். பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சிக்கார்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதனிடையே அன்புமணியின் நடைபயணத்தால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெடும் என ராமதாஸ் தெரிவித்தார். டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி பயணம் என அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த திருப்போரூரில் திட்டமிட்டபடி பயணம் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.