Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் இந்தாண்டு இதுவரை 33.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

தஞ்சாவூர்: தமிழகத்தில் இந்தாண்டு இதுவரை 33.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று காலை பிள்ளையார்பட்டியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகளை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், அங்குள்ள பணியாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்க நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 33.14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு காரணங்களால் உற்பத்தி மற்றும் கொள்முதல் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இறுதி வரை மேலும் 4 லட்சம் டன் நெல் வரும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் தமிழகத்தில் 3.63 லட்சம் டன் அரிசி கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் 36 ஆயிரத்து 954 ரேஷன் கடைகள் உள்ளன. புதிதாக கடந்த ஆண்டு 2009 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.

புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்தலால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் இந்த மாதம் முதல் வழங்கப்பட இருக்கிறது. தற்போது டெல்டா பாசன சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன் வழங்கவும், உரங்கள் கையிருப்பில் வைத்து உரிய நேரத்தில் விற்பனை செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், கூட்டுறவுத் துறை, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.