Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மும்பையில் அக்.27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வார விழாவில் தமிழ்நாடு பங்கேற்கிறது

சென்னை: மும்பையில் நடைபெறும் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி மாநாட்டில் (Global Maritime Summit 2025), தமிழ்நாடு அரசு சிறப்பாக பங்கேற்க உள்ளது. தமிழ்நாடு 1,069 கிலோமீட்டர் நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில் ஒன்றிய மற்றும் மாநில துறைமுகங்கள், கடலோர தொழிற்சாலைகள், சுற்றுலாத்தளங்கள் மற்றும் தொழில் மையங்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் வணிகச் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி, மீன்வளம், தொழில் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்நாட்டிலேயே கப்பல் கட்டுதலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு இணங்க, தூத்துக்குடி மற்றும் கடலூர் துறைமுகங்கள் வழியாக தமிழக தொழில்துறை முன்னெடுப்பு மேற்கொண்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி துறைமுகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது. பண்டைய காலத்திலிருந்தே தமிழ்நாடு கப்பல் கட்டுதல் மற்றும் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கியதற்கான வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. இன்று ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நோக்கி நகரும் தமிழகம், கடல்வழி வணிகம் மற்றும் நீலப்பொருளாதாரம் (Blue Economy) துறையில் வளர்ச்சி அடைய உறுதியாக செயல்படுகிறது.

தமிழ்நாட்டின் கடல்சார் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில், 18 செப்டம்பர் 2025 அன்று சென்னையில் “நீலப்பொருளாதார மாநாடு – 2025” வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேசிய அளவில் நடைபெறும் இந்திய கடல்சார் வார விழாவில், தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கடல்சார் நாடுகளின் பிரதிநிதிகள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். உலகளாவிய கடல்சார் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன், புதிய தொழில்நுட்ப புதுமைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நவீன கொள்கைகள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டின் சார்பில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், தொழில்துறை அமைச்சர், கடல்சார் வாரியம், தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கொண்ட குழு பங்கேற்கவுள்ளனர். இக்குழு தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகம், தொழில், நீலப்பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சியை முன்னெடுத்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் வணிக அமர்வுகள் நடத்தவுள்ளது. தமிழ்நாட்டின் கடல்சார் திறன்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பண்டைய கடல்வழி மரபு அனைத்தும், ஒருங்கிணைந்து இவ்விழாவில் வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.