Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் காலியாக உள்ள 48 மருத்துவ இடங்கள்: என்எம்சி அனுமதி பெற்று நிரப்ப நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான 4ம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இன்னும் 48 இடங்கள் நிரம்பாமல் உள்ளதால் அவற்றை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்திடம் (என்எம்சி) மாநில மருத்துவ கல்வி இயக்ககம் அனுமதி கேட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்கள் அகில இந்திய கலந்தாய்வு மூலமும், மீதமுள்ள 85 சதவீத இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் மேனேஜ்மெண்ட் இடங்களுக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு ஜூலை இறுதி தொடங்கியது. இதில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடங்களில் 6,600 இடங்களும், தனியார் கல்லூரி மேனேஜ்மெண்ட் கோட்டாவில் 1,144 இடங்களும் இருந்தன. அதே போன்று, பிடிஎஸ் படிப்பிற்கு அரசு கோட்டாவில் 1,583 இடங்களும், தனியார் கல்லூரி கோட்டாவில் 515 இடங்கள் இருந்தன.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத கோட்டாவில் 495 எம்பிபிஎஸ் மற்றும் 119 பிடிஎஸ் இடங்கள் இருந்தன. இவை தவிர என்.ஆர்.ஐ கோட்டாவில் மொத்தம் 600 இடங்கள் இருந்தன. ஜூலை இறுதியில் தொடங்கிய பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக தொடர்ந்து 4 சுற்றுகளாக நடைபெற்றது. மேலும், ஜூலை 30ம் தேதி 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெற்றது.

4 சுற்றுகள் முடிந்த நிலையிலும், சென்னை மற்றும் கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 3 பிடிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் கோட்டா சேர்த்து மொத்தம் 48 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 1 பிடிஎஸ் இடம் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 48 மருத்துவ இடங்களை மீண்டும் கலந்தாய்வு நடத்தி நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் நிலையில், இவ்விடங்களுக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தப்படலாம்.