Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டு விவசாயிகளின் உரத்தேவைக்கு உடனடி நடவடிக்கை: ஒன்றியமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு சம்பா (ரபி) பருவத்தில் பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், உரங்களை உரிய நேரத்தில் வழங்குவதை சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் உறுதி செய்திடத் தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கோரி ஒன்றிய ரசாயனம், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டிற்கு, 2025 குறுவை (காரீஃப்) பருவத்திற்குப் போதுமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நெல் விவசாயிகளுக்கு ரூ.215 கோடி செலவில் “குறுவை சிறப்புத் தொகுப்பு” அறிவித்து செயல்படுத்தியது மற்றும் நீர்ப்பாசனத்திற்காக அணைகளை உரிய நேரத்தில் திறந்தது போன்ற மாநில அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், தமிழ்நாடு நெல் உற்பத்தியை சாதனை அளவிற்கு அதிகரிக்க முடிந்தது.

நவம்பர் மாதத்தில் உரங்கள், குறிப்பாக யூரியாவின் தேவை அதிகரிக்கும், இந்த நிலையில், சம்பா நெல் பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் கரும்பு போன்ற பிற பயிர்களின் சாகுபடியும் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய அரசின் உரத் துறை, மாநிலத்தால் முன்மொழியப்பட்ட 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.93 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.88 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.15 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களில், 6.50 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.50 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.80 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.14 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களை ஒதுக்கியுள்ளது.

நடப்பு சம்பா (ரபி) பருவத்தில் பயிர் சாகுபடி பல்வேறு சாதகமான காரணிகளால் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நேரடி உரங்களுக்கான தேவை குறிப்பாக, யூரியாவுக்கான தேவை வரும் நாட்களில் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தால் முன்மொழியப்பட்ட 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.93 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.88 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.15லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களின் தேவையை, சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் உரிய நேரத்தில் பரிசீலித்து, வரும் மாதங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.