தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கான தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது எனவும், குறிப்பாக தேர்தல் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவே, நடைபெற்ற சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி பல்வேறு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த மே மாதம் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தேர்தலுக்கு முன்பு ஏற்கனவே உள்ள 22 உறுப்பினர்களுடன் சென்னை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருச்சியை சேர்ந்த 4 பேர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன் முறைகேடாக 4 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டது முறைகேடானது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மே மாதம் நடைபெற்ற சங்க தேர்தலை ரத்து செய்வதோடு, புதிதாக அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியலை முறைப்படுத்தி, இறுதி பட்டியலை தயாரித்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நிர்வாக குழுவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் மற்றும் சென்னை மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவானது நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், ஏற்கனவே கடந்த மே மாதம் தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன, புதிய உறுப்பினர் சேர்க்கை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்,ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் தேர்தலை முழுவதுமாக ரத்து செய்துவிட்டது,
எனவே அந்த ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது இதையடுத்து மனுதாரரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்து உத்தரவிட்டதோடு இந்த மனு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.