மதுரை: மதுரையைச் சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆழியாறு, அமராவதி, பவானிசாகர், கல்லணை உள்ளிட்ட 11 அணைகளை உடனடியாக தூர்வாரி, நீர் கொள்ளும் பரப்பை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த அணைகளில் மணல், சகதி, களிமண் தேங்கியுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. ஆற்றுப்படுகை அருகே வசிப்போரும் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளனர்.
எனவே தமிழகத்தில் உள்ள 11 அணைகளையும் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் அணைகளை தூர்வாருவது அவசியம். அப்போது தான் மழை நீரை சேமிக்க இயலும். எனவே, அணைகளை தூர்வாரி பராமரிக்கவும், அதற்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.