தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்: தமிழ்நாட்டில் பெரிய நகரங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டம்
சென்னை: தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம், தமிழ்நாடு மாநிலத்தில் கட்டட மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 2016ஐ நடைமுறைப்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியை 21.07.2025 அன்று, சென்னை, ரேடிசான் ப்ளூ ஹோட்டலில் நடத்தியது. அதன் முதற் கட்டமாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி கட்டட மேம்பாட்டாளர்களுக்கு நடத்தப்பட்டது.
ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI), பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (BAI), இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, தெற்கு பிராந்தியத்தின் உறுப்பினர்கள் (CII), இந்துஸ்தான் வணிக வர்த்தக சபை (HCC), இந்திய வர்த்தக மற்றும் தொழில்முறை சபைகளின் கூட்டமைப்பு (FICCI) மற்றும் இதர மேம்பாட்டாளர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், காக்கர்லா உஷா, தனது தொடக்க உரையில் கட்டட மனை விற்பனை சட்ட விதிகளை செயல்படுத்த, தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை பற்றியும் மேலும் நமது மாநிலத்தில் கட்டட மனை விற்பனை துறையில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் ஷிவ் தாஸ் மீனா (ஓய்வு), கட்டடமனை விற்பனை திட்டங்களை பதிவு செய்வதில் இக்குழுமத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து விளக்கினார்.
உதாரணமாக, திட்டப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து முடிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வாரமும் குழுமக்கூட்டம் நடத்தப்படுகிறது. கூடுதலாக, கட்டட மேம்பாட்டாளர்கள் பயன்பெறும் வகையில், திட்ட பதிவு விண்ணப்பங்களுக்கான நிலையான இயக்க நடைமுறை (Standard Operating Procedure) இக்குழுமத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடு வாங்குவோர், கட்டட மேம்பாட்டாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஒவ்வொரு திங்கட்கிழமையும், குறைதீர்க்கும் கூட்டம் இக்குழுமத்தின் தலைவரால் நடத்தப்படுகிறது.
இக்குழுமத்தின் உறுப்பினர்களான முனைவர் எல். சுப்பிரமணியண் (ஓய்வு) மற்றும் வழக்கறிஞர் எம். கிருஷ்ணமூர்த்தி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டப் பதிவு விண்ணப்பங்களை காலநிர்ணயத்திற்குள் முடிக்கும் பொருட்டு இக்குழுமத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கூறினார்கள்.
தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தால் திட்டப் பதிவு விண்ணப்பங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, இக்குழுமத்தின் அலுவலர்களால் பவர் பாயின்ட் விளக்கக்காட்சி (Power Point Presentation) மூலம் விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேம்பாட்டாளர்கள் திட்டப் பதிவு குறித்தும், பல குறைகள் மற்றும் அதனை நிவர்த்தி செய்வது பற்றியும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
இம்மாதிரியான விழிப்புணர்வு நிகழ்ச்சி, வீட்டுமனை விற்பனையாளர்களுக்கும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை வரும் நாட்களில் தமிழ்நாடு மாநிலத்தின் பெரிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.