Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் பாஜ வளரவில்லை மோடி 8 முறை பிரசாரம் செய்தும் கடந்த தேர்தலைவிட வாக்கு குறைவு: அண்ணாமலை போன்றவர்கள் இருந்தால் ஜெயிக்க முடியாது; படுதோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி புதுவிளக்கம்

ஓமலூர்: அண்ணாமலை போன்ற மாநில தலைவர்கள் இருப்பதால்தான் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை, தமிழ்நாட்டில் மோடி 8 முறை பிரசாரம் செய்தும், கடந்த தேர்தலைவிட வாக்குசதவீதம் குறைந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. இதையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் கடந்த 2 நாட்களாக மாஜி அமைச்சர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் தோல்விக்கான காரணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி கேட்டு வந்தார். குறிப்பாக, சேலத்திலேயே அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்தது. இதுகுறித்து சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து எங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை.மத்தியில் ஆளும் பாஜ கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் 8 முறை தமிழகத்திற்கு வந்தார். அமித்ஷா, நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் பிரசாரம் செய்தார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட அதிமுக கூட்டணி ஒரு சதவீத ஓட்டுகள் அதிகம் வாங்கியுள்ளது. உண்மையில் இது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றவர்கள் பிரிந்து சென்றதால் அதிமுக ஓட்டுக்கள் எங்கும் சிதறவில்லை. மாறாக எங்களின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. வேண்டாதவர்கள் பிரிந்து சென்றதால்தான் எங்கள் ஓட்டு ஒரு சதவீதம் கூடியுள்ளது. இதை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தவில்லை. எங்களின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்.

தமிழ்நாட்டில் பாஜ வளரவில்லை. 2019ல் 18.80 சதவீதம் பெற்ற பாஜ கூட்டணி, இப்போது அதிக கட்சிகளை இணைத்து போட்டியிட்டது. ஆனாலும் 18.02 சதவீதம் வாக்குகள்தான் பெற்றுள்ளது. கோவையில் அண்ணாமலைக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்பதெல்லாம் பொய். சி.பி.ராதாகிருஷ்ணன் 2019ல் பெற்ற வாக்குகளையும், இப்போது அண்ணாமலை பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியும். தமிழகத்தில் அதிமுக, திமுகவை யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாது. 1991ல் 2 இடங்களை பெற்ற திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 1996ல் 4 இடங்களை பெற்ற அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

மத்தியில் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது மக்கள் வழங்கிய தீர்ப்பு. தமிழ்நாட்டில் பாஜவை வழிநடத்த நல்ல தலைவர் இருந்திருந்தால் அந்தக்கட்சி மேலும் அதிக வாக்குகளை பெற்றிருக்கும். வரைப்போலவே வேறு சில மாநிலங்களிலும் தலைவர்கள் இருப்பார்கள் என்று கருதுகிறேன். இதுதான் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு காரணம். தேசிய கட்சிகள், மாநில கட்சிகளை தங்கள் வெற்றிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால், மாநிலத்தின் உரிமைகளை தர மறுக்கின்றன. நாங்கள் பாஜ கூட்டணியில் இருந்து விலகியதற்கு இது தான் முக்கிய காரணம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவையில் அண்ணாமலைக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்பதெல்லாம் பொய். சி.பி.ராதாகிருஷ்ணன் 2019ல் பெற்ற வாக்குகளையும், இப்போது அண்ணாமலை பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியும்.