தமிழகம், பீகார் பேரவை தேர்தலை முன்னிறுத்தி பாஜ வியூகம் புதிய துணை ஜனாதிபதி யார்? பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் பெயர் பரிசீலனை
புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அடுத்த துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை பொறுத்த வரையிலும், விரைவில் நடக்க உள்ள தமிழ்நாடு, பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல்களை குறிவைத்து பாஜ வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட 4 பேரின் பெயர்கள் முக்கியமாக பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த 21ம் தேதி இரவு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவால் உடனடியாக பதவி விலகுவதாக அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாஜ மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான் தன்கர் திடீரென பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. தன்கரின் பதவி விலகல் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவரது ராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, தன்கரின் ராஜினாமாவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் முறைப்படி அறிவித்தது. இந்நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் ஆணையமும் உடனடியாக தயாராகி உள்ளது. அரசியலமைப்பு பிரிவு 68ன் பிரிவு 2ன்படி, துணை ஜனாதிபதி பதவி காலியானால், அதை நிரப்புவதற்கான தேர்தல், முடிந்த வரையில் விரைவாக நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்கி விட்டதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக, தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இத்தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் மற்றும் நியமன எம்பிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். அவர்களின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து அடுத்த 30 நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும், ஆயத்த பணிகள் முடிவடைந்ததும் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
துணை ஜனாதிபதியே மாநிலங்களவையின் தலைவர் ஆவார். நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் பாஜவின் பலம், மக்களவை அளவுக்கு வலுவாக இல்லை. இதனால், மாநிலங்களவை தலைவர் தங்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்பதில் பாஜ அதிக முக்கியத்துவம் தருகிறது. அந்த அடிப்படையில்தான் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்து நடக்க உள்ள தமிழ்நாடு, பீகார் சட்டப்பேரவை தேர்தல்களை குறிவைத்தும் பாஜ வியூகம் வகுத்து வருகிறது.
இதுதொடர்பாக, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தீவிர ஆலோசனையில் உள்ளனர். இந்த இரு மாநிலங்களில் இருந்து ஒருவரைத்தான் துணை ஜனாதிபதி ஆக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பீகார் முன்னாள் முதல்வரின் மகனும் ஒன்றிய வேளாண்மைத்துறை இணை அமைச்சருமான ராம்நாத் தாக்கூரை துணை ஜனாதிபதி ஆக்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, பீகார் மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரது பெயர்களும் தீவிர பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜ மாநில தலைவராக இருந்தவரும், தற்போதைய மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், பிரதமரின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலின் போது, தமிழ்நாட்டில் இருந்து 10 மக்களவை தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் என்று அண்ணாமலை அறிக்கை கொடுத்திருந்தார். தென் மாநிலங்களில் இருந்து அதிக சீட்டுகளை பெற முடியும் என்றும் ஒன்றிய உளவுத்துறையும் அறிக்கை கொடுத்தது. ஆனால் தென் மாநிலங்களில் இருந்து சீட்டுகள் குறைவாகவே கிடைக்கும்.
தமிழகத்தில் இருந்து ஒரு சீட் கூட கிடைக்காது என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். அதன்படியே நடந்தது. அதோடு, ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜ கூட்டணி அமைய, சி.பி.ராதாகிருஷ்ணன்தான் முக்கிய பங்காற்றியுள்ளார். இதனால் தமிழக பாஜ தலைவர் மாற்றத்தின்போது சி.பி.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான நயினார் நாகேந்திரனுக்கு பதவி வழங்கப்பட்டது.
தற்போது சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி ஆக்குவது குறித்தும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று காலைபிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் புதிய துணை ஜனாதிபதி பதவி குறித்து டெல்லியில் பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
* இந்தியா கூட்டணி வேட்பாளர் யார்?
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரையில் பாஜ நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தம் 786 எம்பிக்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற 394 வாக்குகள் தேவை. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்பிக்கள் உள்ளனர். இதனால் பாஜ விரும்பும் வேட்பாளர் அடுத்த புதிய துணை ஜனாதிபதியாக வருவதற்கே வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 2022ல் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஜெகதீப் தன்கர் 528 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரசின் மார்க்ரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். எனவே இம்முறை இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
* 2 நாளில் தேர்தல் அறிவிப்பு?
தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்த 2 அல்லது 3 நாளில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் ஆகஸ்ட் மாதம் இறுதியில் புதிய துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டு விடுவார். அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் இருக்கும்.


