Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்திற்கு 5 சிறப்பு தேர்தல் கணக்கு பார்வையாளர்கள் நியமனம்: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

சென்னை: தமிழகத்திற்கு 5 சிறப்பு தேர்தல் கணக்கு பார்வையாளர்களை நியமித்து, வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களில் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் சிறப்புத் தேர்தல் பார்வையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. அதன்படி 6 மாநிலங்களுக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர்களையும், 5 மாநிலங்களுக்கு சிறப்பு தேர்தல் செலவு கணக்கு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

அதன்படி தமிழகத்திற்கென உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் துடேஜா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹிமாலினி காஷ்யப், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முரளிகுமார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நீனா நிகம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு தேர்தல் கணக்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே முன்னாள் வருவாய்பிரிவு (ஐஆர்எஸ்) அதிகாரிகள்.மேலும் தேர்தல் பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

* முடிந்த அளவிற்கு அதிக வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான பகுதிகளைப் பார்வையிட வேண்டும். இந்த பகுதிகளில் உள்ள மக்களோடு கலந்துரையாடுவதுடன் பதற்றமான, சிக்கலான வாக்குச்சாவடிகளை அடையாளம் கண்டு தீர்வு காணவேண்டும்.

* வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுடன் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடத்தும் கூட்டங்களை, தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிடுவதுடன் கோரிக்கைகள் முறையாக கவனிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பாதுகாப்பு படைகளைப் பிரித்து அனுப்புவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பரிசோதிப்பது அரசியல் கட்சிகளின் சுவிதா இணையதளப் பயன்பாடு போன்றவற்றை முழுமையாக கண்காணித்து, அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

* தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை, தொகுதி முழுவதும் சுற்றி வரவேண்டும்

* அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் வாகனங்களில் இருப்பிடத்தைக் கண்டறியும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்.

* தேர்தல் பார்வையாளர்கள் தாங்கள் இருக்கும் இடம், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* செல்போன், மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளும் வேட்பாளர்கள், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். இது ெதாடர்பாக எழும் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களுக்கான தொடர்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்களாக நேர்மையான நபர்களை நியமிக்க வேண்டும். இவர்கள் தேர்தல் பணியில் நடுநிலையாக செயல்படுவதுடன் கடமையில் நேர்மை மற்றும் ஒற்றுமையுடன் செயல்படுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

* வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், வாக்குப்பதிவு நேரத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஏராளமான வாக்குச்சாவடிகளைப் பார்வையிடுவதுடன், வாக்குச்சாவடிக்கு உள்ளே காணப்படும் நிலவரத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்து, வாக்குப்பதிவு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

* மத்திய, மாநில படையினர் முறையாக பயன்படுத்தப்படுகின்றனரா, நடுநிலையுடன் செயல்படுகிறார்களா என்பதை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்து எந்தவொரு அரசியல் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் சாதகமாக செயல்படாத வகையில் பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.