Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகம் வரும் ராம நவமி யாத்திரை குழு அரசியல் ஆதாயம் தேட கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராம நவமியை முன்னிட்டு இன்று தமிழகத்தின் கன்னியாக்குமரிக்கு வரும் கேரள யாத்திரை குழு அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை கேரள மாநிலம் மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்வதற்கு கேரளாவை சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சென்று கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய விண்ணப்பித்ததை சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில், யாத்திரைக்கு அரசு எதிராக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கன்னியாக்குமரியில் யாத்திரை செல்ல அனுமதிக்கோரி மனுதாரர் விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் வழியாக செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, திருச்செந்தூர் வழியாக செல்ல அனுமதி தரமுடியாது. மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அறிவுறுத்தலின் படி யாத்திரை குழு செயல்பட வேண்டும். கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்திற்கு ராமர் படத்துடன் 3 வாகனங்கள் மற்றும் 30 பேர் செல்ல அனுமதி தரப்படுகிறது. இன்று மதியம் 2 மணியளவில் யாத்திரையை முடித்து கேரளாவிற்கு திரும்ப செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.