Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலீடுகளை ஈர்க்கும்நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

சென்னை: முதலீடுகளை ஈர்க்கும் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்ததும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை செய்து வருகிறோம்.

அந்த வகையில் மூன்று ஆண்டுகளாக தொழில் துறையில் வரலாறு காணாத மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், முதலீடுகளை ஈர்க்கும் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறார் தமிழக முதல்வர். இந்தியாவில் வெளிநாடு முதலீடுகள் வரும்போது முதலீட்டாளர்கள் வந்து தட்டும் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

முதலீட்டாளர்கள் வந்து குவியும்போது நான் முதல்வன் திட்டம் ஒவ்வொரு நாளும் அந்த திட்டத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் இங்கு வரும்போது தேவையான உட்கட்டமைப்பு அவர்களது முதலீடுகள் பெரும் லாபத்தை ஏற்கும் அளவிற்கு தொழிலாளர்கள் கிடைக்கும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான மிகப்பெரிய முன்னேற்றமடைந்த ஒரு மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இங்கு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கும் சரிசமமாக வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. முதலீடுகள் ஒரு பெரிய தொழில் நிறுவனமாக வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் இதனுடைய மிக முக்கியமான நோக்கமாக உள்ளது. தொடர்ந்து இது கண்காணிக்கப்படுகிறது.

இந்தியாவில் முதலீடுகள் வந்து, அது தொழிலாக மாறுவதில் தமிழகம் முன்னணியாக உள்ளது. குழு போட்டு முதலீடுகளை உறுதி செய்த ஒரே மாநிலமாக தமிழகம். கடந்த ஆட்சியில் முதலீடு கையெழுத்து ஆனதோடு சரி, ஆனால் அதை வேலை வாய்ப்பாக மாற்ற முயற்சி செய்யவில்லை. இதுதான் எதார்த்த உண்மை. அவர்கள் விட்டு சென்றதையும் நாங்கள் தற்பொழுது தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம். 19 முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்திருக்கிறோம். இந்தியாவில் தமிழகம் போல தொழில் தொடங்க ஏதுவான மாநிலம் எதுவும் இல்லை. தொழில்துறையில் மிக முக்கியமான மாற்றத்தை தமிழகம் கண்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அது மிகப்பெரிய வெற்றிப் பயணமாக இருக்கும். இந்த வருடம் இறுதியில் ஒரு நல்ல மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அமெரிக்காவில் உள்ள சிகாக்கோ மற்றும் சான்பிரான்சிஸ்கோ தமிழர்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு சென்று அங்கு உள்ள தமிழர்களுடன் முதலமைச்சர் சந்தித்து பேச இருக்கிறார். பசுமை ஹைட்ரஜன் மூலக்கூறு (Green Hydrogen Molecular) இந்தியாவில் முதன்முதலாக தமிழகத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.