Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் 1,256 மருத்துவ முகாம்கள்: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

* சனிக்கிழமை தோறும் நடைபெறும்

* பரிசோதனை முடிவுகள் உடனே தெரிந்து கொள்ளலாம்

* நோயாளிகளை இனிமேல் மருத்துவ பயனாளிகள் என்று அழைக்க வேண்டும்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சனிக்கிழமை தோறும் 1,256 மருத்துவ முகாம்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் பரிசோதனைகளின் முடிவுகள் உடனே தெரிந்து கொள்ளலாம். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை இனிமேல் மருத்துவ பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? சில நாட்களுக்கு முன்னால் காலையில் வாக்கிங் சென்றபோது, லேசாக தலைசுற்றல் இருந்தது. மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவர்கள் சில பரிசோதனைகள் செய்ய அங்கே அட்மிட்டாக சொன்னார்கள். மருத்துவமனையில் இருந்தபோதும், அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டுதான் இருந்தேன். சில அவசர கோப்புகளை கவனித்ததோடு, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் எப்படி நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர்கள் - பொதுமக்கள் என்று காணொலி வாயிலாக விசாரித்தேன்.

தூத்துக்குடிக்கு வந்த பிரதமரிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அளிக்க வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் தயார் செய்து அனுப்பி வைத்தேன். ஏனென்றால், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும், மக்கள் பணியாற்ற வேண்டும், இதுதான் என்னுடைய விருப்பம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தலைமைச் செயலக அலுவலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை தொடங்கினேன்.

அப்போது என்னுடைய செயலாளர்கள் கூட சொன்னார்கள், “வெளி நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கலாமா?” என்று கேட்டார்கள். “இல்லை, அதையெல்லாம் தள்ளி வைக்க வேண்டாம், மக்களைச் சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும், என்னுடைய உடலில் ஏதாவது நோய் இருந்தால் அது சரியாகிவிடும். எனவே, மக்கள் பணியை செய்தால், அதுவே எனக்கு உடல் நலத்தை கொடுத்துவிடும்” என்று சொல்லிவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன்.

மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்துகொண்டு பேசுகின்ற முதல் நிகழ்ச்சி இது, நாட்டு மக்களுடைய நலன் காக்கும் நிகழ்ச்சி. நாட்டு மக்களுடைய நலன்தான், என்னுடைய நலன். நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது, என்ன நிலைமை இருந்தது என்று யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கொரோனா இரண்டாவது அலை, ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என்று தமிழ்நாடே நெருக்கடியில் இருந்து தவித்துக் கொண்டிருந்தது. நான் உள்பட அனைத்து அமைச்சர்களும், அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களாக மாறிவிட்டோம். தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, எல்லோரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்தோம்.

அதேபோல, இன்றைக்கு கூட, இந்த “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலமாக, அனைத்து அமைச்சர்களும் மீண்டும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களாக மாறி அவர்களுடைய மாவட்டத்தில் முகாம்கள் தொடங்கியிருக்கிறார்கள். கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள் என்று சொல்லி, கல்விக்காகவும், அதே அளவுக்கு மருத்துவத்திற்காகவும் ஏராளமான திட்டங்களை செய்ய தொடங்கினோம்.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48, பாதம் பாதுகாப்போம், இதயம் காப்போம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம், மக்களைத் தேடி ஆய்வக சேவைகள், நடப்போம்-நலம் பெறுவோம் திட்டம், வணிகர்களை தேடி மருத்துவ திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம் என்று இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த துறையை மிகச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டு வருகிறார். அதுனால்தான், ஐ.நா. சபையே விருது கொடுத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டியிருக்கிறது.

சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கின்ற ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு முகாம்களிலும், மருத்துவர்கள் உள்பட 200 மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள். 17 தனித்துவமான மருத்துவ சேவைகள் இந்த முகாம்களில் இருக்கும். சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்பு உடையவர்கள், இதய நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இந்த முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

முகாம்களில், அனைத்து பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்கள் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்யப்பட இருக்கிறது. பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின்படி, இ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட இருக்கிறது. உங்கள் டெஸ்ட் ரிப்போர்ட் அனைத்தும் மொத்தமாக பைல் செய்து உங்களிடம் வழங்கிவிடுவோம்.

நம்முடைய அரசின் குறிக்கோள், நகர்ப்புறத்தில், நன்றாக படித்து, வசதியானவர்களுக்கு கிடைக்கின்ற மருத்துவ சேவை, கிராமப்புறத்தில் இருக்கின்ற ஏழை எளிய பாமர மக்களுக்கும் கிடைக்கவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அப்படி நம்முடைய உடல்நலம் நன்றாக இருந்தால்தான் நம்மால் மகிழ்ச்சியாக வாழமுடியும் - உழைக்க முடியும் - சாதிக்க முடியும். மருத்துவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், மருத்துவர்களையும் - மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்கள் “மருத்துவப் பயனாளிகளாக” நாம் பார்க்க வேண்டும். இந்த முகாம்களுக்கு வருகின்ற மக்களையும், மருத்துவப் பயனாளிகளாகதான் பார்க்க வேண்டும். மருத்துவச் சேவைகள் வழங்குவதிலும், மக்களுடைய உடல்நலனைப் பாதுகாப்பதிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்றாக இருக்கவேண்டும். இதுபோன்ற திட்டங்களால் அது நிச்சயம் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, முகாமில் பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, காணொலி வாயிலாக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாமிற்கு ரூ.1,08,173 வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம், 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம், சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 லட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்கள் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி, உயர் கல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு, மாற்றுத்திறனாளிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் முகாம்கள் நடத்தப்படும். 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் மட்டுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள் என்று சொல்லி, கல்விக்காகவும், அதே அளவுக்கு மருத்துவத்திற்காகவும் ஏராளமான திட்டங்களை செய்ய தொடங்கினோம். மருத்துவச் சேவைகள் வழங்குவதிலும், மக்களுடைய உடல்நலனைப் பாதுகாப்பதிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்றாக இருக்கவேண்டும். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48, வணிகர்களை தேடி மருத்துவ திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம் என்று இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. ஐ.நா. சபையே விருது கொடுத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டியிருக்கிறது.

* பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை

40 வயதிற்கு மேற்பட்டோர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

* ஒரே நாளில் 44,418 பேர் பயன்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரேநாளில் சென்னையில் 2,935 மருத்துவ பயனாளிகளுக்கு 329 பேருக்கும், செங்கல்பட்டு 1,067 மருத்துவ பயனாளிகளில் 329 பேருக்கும், காஞ்சிபுரம் 1,176 மருத்துவ பயனாளிகளில் 133 பேருக்கும், திருவள்ளூரில் 1,405 மருத்துவ பயனாளிகளில் 286 பேருக்கும் என 44,418 மருத்துவ பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். அதில் இசிஜி 10,207 பேருக்கு எடுக்கப்பட்டுள்ளது. 11,916 பேருக்கு உடனடியாகவே மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடந்தது. இதில் 24 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அதிகபட்சமாக சென்னை 2,935 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 2,013 பேர், நீலகிரியில் 1,904 பேர் முகாம்களில் பங்கேற்றுள்ளனர்.