Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யாரையாவது தவறாக எழுதினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் பாஜ ஐடி விங் நிர்வாகிகளுக்கு தமிழிசை எச்சரிக்கை

சென்னை: பாஜ ஐடி விங் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு மட்டுமல்லாமல், யாரையாவது தவறாக எழுதினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தனது தேர்தல் பிரசாரத்தின்போது தென்சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில் மக்கள் தொடர்பு அலுவலகம் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, சென்னை சாலிகிராமம், ஆற்காடு ரோடு, மெஜஸ்டிக் கார்டன் என்னுமிடத்தில் அமைக்கப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தை நேற்று அவர் திறந்து வைத்தார். அப்போது, தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: நான், கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவள். இன்னொன்று எதிர்க்கட்சி இணையதளவாசிகளை எதிர்ப்பது போலவே உட்கட்சி இணையதளவாசிகளையும் நான் விமர்சிக்கிறேன்.

உள்ளே நடக்கும் கட்சி பிரச்னைகள், கட்சியின் தலைவர்களை தவறாக எழுதுவீர்கள் என்றால், முன்னாள் மாநில தலைவர் என்ற முறையில் சொல்கிறேன், கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் எச்சரிக்கிறேன். நான் கடுமையாக உழைப்பதற்காக வந்து இருக்கிறேன். நான் கவர்னராகவே இருந்து இருக்கலாம். ரோட்டில் உட்கார்ந்து இருக்கிறீர்களே என்கிறார்கள். நானே கவலைப்படவில்லை, உங்களுக்கு என்ன கவலை? நான் கவர்னராக இருக்க வேண்டுமா, தலைவராக இருக்க வேண்டுமா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்.

நான் முடிவு செய்துவிட்டேன் தமிழ்நாடு களத்தில்தான் நிற்பேன். இணையதளவாசிகள் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள். என் முகத்தை இன்று விகாரமாக போட்டு இருக்கிறார்கள். நான் ஒன்றும் அழகி என சொல்லிக்கொள்ளவில்லை. தோல்வி என்பது சகஜம்தான். மீண்டும் நான் மாநிலத் தலைவராவது என் கையில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.