Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு

* மீறினால் கடும் நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டு பள்ளிகளில் அரசின் முன்அனுமதி இல்லாமல் கல்விசாராத எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம், பள்ளி மாணவியரை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடத்தப்பட்டது. மதுரையை சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்ற இளைஞரை அழைத்து பேச வைத்தனர். அவர் மாணவியரிடையே பேசும்போது, பாவ, புண்ணியங்கள் குறித்து பேசினார். பாவ புண்ணியங்கள் அடிப்படையில்தான் நமது பிறப்பு அமைகிறது என்றும், ‘பார்வைக் குறையோடு பிறப்பது, உடல் குறையோடு பிறப்பது, பெண்கள் அழகின்றி பிறப்பது போன்றவை அனைத்தும் போன பிறப்பில் செய்த பாவங்களின் அடிப்படையில் தான்’ என்று பேசினார்.

அவரது பேச்சு அங்கிருந்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அங்கு பேச வந்திருந்த பார்வையற்ற தமிழாசிரியரான சங்கர் என்பவர், மகாவிஷ்ணுவின் பேச்சை கண்டித்தார். அறிவுக்கு பொருத்தம் இல்லாதவற்றை இங்கு பேசக்கூடாது. பள்ளி என்பது சமத்துவமான இடம். இங்கு கல்வி அறிவுக்கு ஏற்றதைத்தான் பேச வேண்டும் என்று தெரிவித்தார். அவரை மகாவிஷ்ணு இடைமறித்து விவாதம் செய்ய அழைத்துள்ளார். அப்போது இருவரும் காரசாரமாக பேசினர். இந்த விவகாரம் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவம் சமூக வெளியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த பள்ளி முன்பு அமர்ந்து இந்திய மாணவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதுகுறித்து கேள்வி கேட்ட தமிழாசிரியர் சங்கர் பேசுவதை தடுக்கும் வகையில், அவரை சில ஆசிரியர்களே கட்டுப்படுத்த முயன்றனர். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விவகாரம் சமூக வெளியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த பள்ளி முன்பு அமர்ந்து இந்திய மாணவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அசோக் நகர் பள்ளிக்கு அதிகாரிகளுடன் நேரடியாக சென்று, அங்கு மாணவியரை சந்தித்து, அறிவுக்கு பொருத்தமான கருத்துகளை கேட்க வேண்டும் என்றும், தற்போது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், நன்றாக படித்து பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கல்விக்கு தொடர்பில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இல்லாமல் பள்ளிகளில் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

2 தலைமை ஆசிரியர்கள் பணி இடமாற்றம்

பள்ளியில் சொற்பொழிவு நடந்த சம்பவம் தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று மாலை வரை நடந்தது. உடனடியாக, பள்ளித் தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை அரசு மேனிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேனிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பள்ளி நிகழ்ச்சிகளுக்கு புதிய வழிமுறைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ள தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்கு தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை, தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்க தேவையான முயற்சிகளை பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும்,

முற்போக்கான, அறிவியல் பூர்வமான கருத்துகளையும், வாழ்க்கை நெறிகளையும் பெறும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட ஆணையிட்டுள்ளேன். தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.