Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறிய பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்கள் பெயரில் விருது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறிய பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள், விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வடிவமைப்பு ஆகிய பொருண்மைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார்.

கடந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பணிகளான மாநாட்டு அரங்கங்கள் மற்றும் லச்சினை வடிவமைப்பு, புகைப்பட கண்காட்சி, காட்சியரங்கம், நிகழ்ச்சி நிரல், விழா அழைப்பிதழ், கலைநிகழ்ச்சிகள் குறித்தும், ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்து தகுதிப்படுத்தும் பணிகள், மாநாட்டு மலரில் இடம்பெறும் அம்சங்கள் குறித்தும் விரிவான ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் அலுவலர்கள் உள்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர்,

ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் முருகனடியார்களான நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், வாரியார் போன்ற 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட வேண்டும். அதற்காக தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களை சிறப்பித்தல் மற்றும் மாநாடு நடைபெறும் இரண்டு நாட்களும் 50,000 பேருக்கு உணவு வழங்குதல் ஆகியவற்றை மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.