சென்னை: தமிழகத்தில் நேற்று வெப்பநிலை அதிகரித்தது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து சென்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடல் காற்று வீசுவது குறைந்து தரைக் காற்றில் வெப்பம் அதிகரித்தது.
வட தமிழகத்தில் உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதிகபட்சமாக வேலூரில் நேற்று 105 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு 104 டிகிரி, திருச்சி, திருத்தணி 102 டிகிரி, சென்னை, கரூர், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வலுக்குறைந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.


