தாம்பரம் அருகே பரபரப்பு; வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை தடுத்து நிறுத்திய வளர்ப்பு பூனை: பொதுமக்கள் நெகிழ்ச்சி
தாம்பரம்: தாம்பரம் அருகே வீட்டுக்குள் செல்ல முயன்ற 5 அடி நீள நல்லபாம்பை தடுத்துநிறுத்தி குடும்பத்தினரை காப்பாற்றிய வளர்ப்பு பூனையால் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் என்ஜிஓ நகர் பகுதியை சேர்ந்தவர் பெல்வின். இவர், தனது வீட்டில் செல்லப்பிராணியாக லியோ என்ற பூனையை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று வெளியில் வந்த பூனை லியோ, வீட்டு வளாகத்தில் உள்ள தோட்டத்தில் செடிகளை பார்த்து சீறியபடி கத்தியது. இதை கவனித்த பெல்வின், அருகில் சென்று பார்த்தபோது அங்கு 5 அடி நீள நல்ல பாம்பு படம் எடுத்தவாறு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்தபோது நல்ல பாம்பு வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தது. ஆனால் லியோ, நல்ல பாம்பை வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி தனது உரிமையாளரையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாத்து நின்றது. அதற்குள் அங்கு வந்த பாம்பு பிடி வீரர் படம் எடுத்தவாறு நின்ற நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பையில் அடைத்து தாம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வளர்ப்பு பூனை லியோவின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


