உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு சூர்யகாந்த் பெயர் முறைப்படி பரிந்துரை: வரும் நவ.24ல் பதவியேற்பு
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் பி.ஆர்.கவாய் பதவிக்காலம் வரும் நவம்பர் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இவர் கடந்த மே.14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற மரபின்படி பணியில் உள்ள தலைமை நீதிபதி, அடுத்த புதிய தலைமை நீதிபதிக்கான பெயரை ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கும் சூர்யகாந்தை உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முறைப்படி பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்த கடிதத்தை ஒன்றிய சட்டத்துறைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட பரிந்துரையை ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம், மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் மூத்த நீதிபதியாக தற்போது பணியாற்றி வரும் சூர்யகாந்த், உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார். 63 வயதான மூத்த நீதிபதி சூர்யகாந்த் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வுப்பெற்றார். இவர் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகள் உட்பட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். சட்டத்தை கடுமையாக அணுகினாலும், அதனுள் ஒரு மனிதாபிமானப் பார்வை கொண்டவர் எனப் பாராட்டப்படுகிறார். வரும் நவம்பர் 24ம் தேதி பதவியேற்க உள்ள நீதிபதி சூர்யகாந்த், வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை ஓராண்டுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
