திருமலை: வாடகை தாய் மூலம் குழந்தை பெறலாம் எனக்கூறி தம்பதியிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண் டாக்டர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் சிருஷ்டி டெஸ்ட் டியூப் பேபி என்ற குழந்தைகள் சிகிச்சை மையம் உள்ளது. இம்மையத்தின் விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்த ராஜஸ்தானை சேர்ந்த குழந்தையில்லாத ஒரு தம்பதி இம்மையத்திற்கு வந்தனர். அவர்களிடம் டாக்டர் நர்மதா, வாடகை தாய் மூலம் மட்டுமே நீங்கள் குழந்தை பெற முடியும். இதற்காக ரூ.30 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளார். இதை தம்பதியினர் ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி அவர்களை விஜயவாடாவிற்கு அனுப்பி அங்கு செயற்கை கருவூட்டலுக்கு கருமுட்டை மற்றும் விந்தணு சேகரிக்கப்பட்டதாம். அதன்பிறகு வாடகை தாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் மூலம் குழந்தை பெறலாம் என நர்மதா கூறியுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், வாடகை தாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால் மேலும் ரூ.10 லட்சம் வேண்டும் என டாக்டர் நர்மதா தெரிவித்தாராம். அதனையும் தம்பதி கொடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு குழந்தையின் தோற்றத்தில் தம்பதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்காக டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என நர்மதாவிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தம்பதியினர் டெல்லியில் டி.என்.ஏ பரிசோதனை செய்தனர். அதில் குழந்தையின் டிஎன்ஏ வேறு ஒருவருடையது என கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, டாக்டர் நர்மதாவிடம் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவரும், அவரது மகன் ஜெயந்தும் மிரட்டினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் டாக்டர் நர்மதா டெல்லியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணியை விமானம் மூலம் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண் குழந்தை வேண்டாம் என்றதால், அவரது குழந்தையை ராஜஸ்தான் தம்பதியிடம் கொடுத்துள்ளனர். அதற்காக குழந்தையை பெற்றெடுத்த பெண்ணுக்கு ரூ.90 ஆயிரத்தை கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் நர்மதா உள்பட 8 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் டாக்டர் நர்மதா மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர் நடத்தி வந்த சிகிச்சை மையம் அனுமதியில்லாதது என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.