இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை ; ஒன்றிய அரசே கையாளட்டும் : உச்சநீதிமன்றம்
டெல்லி : இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை ; ஒன்றிய அரசே கையாளட்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விமானிகள் பணி நேரம் தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், அதற்கேற்ப போதிய விமானிகளை நியமிக்காமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமலும் இண்டிகோ நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டது. இதன் விளைவாக நாடு முழுவதும் கடந்த 7 நாட்களாக இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, திருமணம் மற்றும் குளிர்கால விடுமுறை நாட்களில் ஏற்பட்ட இந்தத் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் மற்ற விமானங்களிலும் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்தன. பயணிகளின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.610 கோடி கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமான சேவை பாதிப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார். 2500 விமான சேவைகள் முடங்கி உள்ளதாகவும் 95 விமான நிலையங்கள் பாதிப்படைந்துள்ளன என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதை கேட்ட உச்சநீதிமன்றம், இண்டிகோ விமான சேவை முடக்கத்தால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகவும் இது மிக தீவிரமான பிரச்சனை என்றும் தெரிவித்தது. ஒன்றிய அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதை அறிவதாகவும் ஒன்றிய அரசே அதை கையாளட்டும் என்றும் இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய நிலை தற்போது இல்லை என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.


