Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. உடல் ரீதியாக பல சிக்கல்களை சுனிதா எதிர்கொள்ள வாய்ப்பு: விஞ்ஞானிகள் தகவல்!!

ஃபுளோரிடா: போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீண்ட காலமாக விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் நாளை மறுநாள் பூமிக்கு திரும்புகின்றனர். 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பும் இந்த வீரர்களுக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆய்வு பணிகளை முடித்துவிட்டு 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், அவர்களை சுமந்து சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானது. ஸ்டார்லைனரில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய முடியாததால் இருவரும் திட்டமிட்டப்படி பூமிக்கு திரும்ப முடியாமல் போனது. அவர்களை மீட்கும் நாசாவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றது ஸ்பேஸ் எக்ஸின் அதிபரை எலான் மஸ்க் உதவியுடன் இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் பணிகளை தீவிரப்படுத்தினார். இதையடுத்து பால்கன்-9 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ், வில்மோரும் பூமிக்கு திரும்புகின்றனர். 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உடல் ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். விண்வெளியில் புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் பூமிக்கு திரும்பியதும் எலும்பு அடர்த்தி குறையும் என்றும், தொடர்ந்து காற்றில் மிதந்த காரணத்தால் தசை மற்றும் கண் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக அவர்கள் விண்வெளியில் இருந்ததால் பூமியின் சூழலுக்கு மீண்டும் பழக்கப்பட சிறிது காலம் ஆகலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 வீரர்கள் சுமந்து கொண்டு பூமிக்கு திரும்பும் விண்கலம் ஃபுளோரிடா மாகாணத்தில் தரையிறங்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.