Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோடையில் இதுவரை இல்லாத அளவிற்கு மதுராந்தகத்தில் 14.2 செமீ மழை பொழிவு: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், மதுராந்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் நேற்று முன்தினம் இரவு 14.2 செமீ மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கருமேகக் கூட்டங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகளுடன் குளிர்ந்த வானிலை நிலவியது. தொடர்ந்து, மாலை 4 மணியளவில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை பெய்தது.

பின்னர், மழை ஓய்ந்த நிலையில், வானில் அழகான வானவில் தோன்றியது. ஏற்கனவே, கனமழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் வானில் தோன்றிய வண்ணமிகு வானவில்லை கண்டு ரசித்தனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. ஏராளமான பொதுமக்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கால்வாய்கள் வழியாக சென்று ஏரி, குளம், குட்டைகளை சென்றடைந்தது. வயல்வெளிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இந்த திடீர் மழையால், கோடைகால மழையை நம்பி விவசாயம் செய்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மதுராந்தகம் ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போன்ற தேங்கியது.

இதனை அறியாமல் சென்ற வாகனங்கள் மழைநீர் வெள்ளத்தில் சிக்கி பழுதானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 14.2 செ.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மதுராந்தகத்தில் விவசாயிகள் கூறுகையில், ‘கோடை மழையை நம்பி நெற்பயிர் விவசாயம் செய்துள்ளோம். கோடை மழையானது அவ்வப்போது மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் வயல்வெளி, வாய்க்கால் வரப்புகளில் மழைநீர் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.