Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தற்கொலைக்கு சமமான கூட்டணி அதிமுகவை விழுங்குவதுதான் பாஜவின் உடனடித் திட்டம்: திருமாவளவன் பேட்டி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்த தேர்தல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையிலான தேர்தலாக தான் அமையும். அதிமுகவுடன் பாஜ இருப்பதால் அந்த கூட்டணியை வீழ்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அதிமுக தலைமையிலான அணி என்பதை விட, பாஜ தலைமையிலான அணி என்ற நிலை உருவாகியுள்ளது. அந்த கூட்டணியில் அதிமுக அமைதியாகவும், பாஜ சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறது. அதிமுக என்ற திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர் தான், நயினார் நாகேந்திரன். அவர் இன்று பாஜ தலைவராகிவிட்டார். அதிமுகவை விழுங்குவதுதான் பாஜவின் திட்டம். இதை அதிமுக புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் இரண்டு சீட்டாகவோ, ஒரு சீட்டாகவோ குறைவது பிரச்னை இல்லை. நாங்கள் ஆண்ட கட்சி அல்ல. ஆனால் அதிமுக ஆண்ட கட்சி. இன்றும் 65 எம்எல்ஏக்களை கொண்ட கட்சி. அந்த கட்சி தேய்மானம் அடைவதற்கு, அதிமுக உடன்படுகிறதா, பாஜ அதுபோன்ற செயல் திட்டத்துடன் செயல்படுகிறதா, இல்லையா? முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தி வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறுவது, உடன்பட்ட கருத்தாக இல்லை. அப்படிப்பட்டவர்களுடன் அதிமுக எப்படி பயணிக்க முடியும். பயணிக்க துணிகின்றனர். பாஜவுடன் அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமமானது. ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால், அப்போது விசிகவின் நிலை என்ன என்பது அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும். அதேபோன்ற யூகமான கேள்விகளுக்கு இப்போது பதில் கூற முடியாது.

* பாஜவை விஜய் கண்டிக்காதது ஏன்?

திருமாவளவன் கூறுகையில், ‘மதுரை முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டதை நடிகர் விஜய் எதிர்த்து கருத்து கூறியிருக்க வேண்டும். அவருக்கு ஆலோசனை வழங்க கூடியவர்கள் விஜய்க்கு வழிகாட்டுதல் தந்திருக்க வேண்டும். பெரியாரை விமர்சனம் செய்த பின்பும், விஜய் அமைதி காக்கிறார் என்றால், அவர் உண்மையிலேயே பெரியாரை ஏற்றுக் கொண்டாரா, உள்வாங்கிக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது’ என்றார்.