திண்டுக்கல்: நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக சென்னை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை புறப்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றதும் பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். பின்னர், ரயில் மீண்டும் புறப்பட்ட சிறிது நேரத்தில், தாமரைப்பாடி ரயில் நிலையத்துக்கு முன்னதாக ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை குபுகுபுவென வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், டிடிஆருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் நடந்த சோதனையில், மாற்றுத்திறனாளிகள் கழிவறை அருகே உள்ள ஏசி இயந்திரத்தின் மின்இணைப்பில் கோளாறு ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஏசி இயந்திர மின்இணைப்பு சரி செய்யப்பட்டது. இதையடுத்து 30 நிமிட தாமதமதத்துக்கு பின் அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் தாமரைப்பாடி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.