ஸ்டன்ட் கலைஞர் விபத்தில் மரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்தோம்: இயக்குனர் பா.ரஞ்சித் விளக்கம்
சென்னை: படப்பிடிப்பில் ஸ்டன்ஸ் கலைஞர் மோகன் ராஜ் விபத்தில் பலியானார். இந்த சம்பவத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது என இயக்குனர் பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட அறிக்கை: திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம்.
அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன.
சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.
ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். அவரது மறைவுக்கு இரங்கல். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.