Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க மாணவர்கள், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் மாணவர்கள், இளைஞர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த கலைமாமணி விருது வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் எப்போதுமே கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடுகின்ற ஒரு இயக்கம், தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த கலையையும், ஒரு கருவியாக பயன்படுத்தியவர்கள் தான், திராவிட இயக்க தமிழ்நாட்டு தலைவர்கள். அண்ணா, கலைஞர் ஆகியோர் நாடகத் துறையிலும், திரைத் துறையிலும் முத்திரை பதித்தவர்கள்.

இந்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், கலைமாமணி விருதுக்கும், கலைஞர் இந்த அரங்கத்திற்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கே வாகை சந்திரசேகர் குறிப்பிட்டது போல, சங்கீத நாடக சங்கம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்று மாற்றியமைத்தவர். இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியதும் கலைஞர். அதே போல் ஆரம்பத்தில், ‘கலா சிகாமணி’, என்ற பெயரில் தான் இந்த விருதுகள் வழங்கப்பட்டன பெயர் மாற்றம் செய்து “கலைமாமணி விருது” என்று அறிவித்தார்.

1967ம் ஆண்டில், கலைஞர் கலைமாமணி விருதிற்கு சிறந்த வசனகர்த்தாவாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் அமைச்சர், முதல்வராக இருந்தவர் அண்ணா, கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்த அரங்கத்தில் கலைஞர் பெயரைச் சொன்னதும், அவர் எழுந்து, விருது வாங்குவதற்காக மேடை நோக்கி வந்தார். அப்போது முதல்வராக இருந்த அண்ணா, அந்த விருதை கலைஞர் கொடுக்காமல், விருதுக்கான பதக்கத்தை தன்னுடைய கழுத்திலே போட்டுக் கொண்டார். பிறகு தான், அந்த பதக்கத்தை கலைஞர் கழுத்தில் அணிவித்தார். கலைமாமணி விருது பெறுவதால், கலைஞர் கிடைத்த பெருமையை தனக்கு கிடைத்த பெருமையாக கொண்டாடினார்.

எழுத்தாளர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், அரசியல் தலைவர், முதல்வர் என்று கலைஞர் எத்தனையே பரிணாமங்கள் இருந்தாலும், கடைசி வரைக்கும் அவருடைய அடையாளமாக ‘கலைஞர்’ என்கிற பெயர் தான் இன்று வரைக்கும் நிலைத்து நீடித்து இருக்கிறது. கலைமாமணி விருதை வாங்குவதால் உங்களுக்கு பெருமை என்று சொல்வதை விட, உங்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை கொண்டிருப்பதால் தமிழ்நாட்டுக்கு அது பெருமை.

2009ம் ஆண்டு, இதே கலைவாணர் அரங்கத்திலே நடந்த நிகழ்ச்சியில், கலைமாமணி விருதுகளை வழங்கி கலைஞர் நீங்கள் தேசிய விருதுகளை வாங்கலாம், சர்வதேச விருது பெறலாம். ஆனால், எந்த விருதாக இருந்தாலும் அது ஒரு தாயின் முத்தத்திற்கு ஈடாகாது. இந்த கலைமாமணி விருது என்பது அந்த தாயின் முத்தத்திற்கு ஈடானது என்று சொல்லியிருக்கின்றார். தாயின் முத்தத்திற்கு நிகரான கலைமாமணி விருதை தான் இன்றைக்கு முதல்வர் உங்களுக்கு தர இருக்கின்றார்.

அரசு அமைந்த பிறகு, நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித் தொகையை, ரூ.2 ஆயிரம் இருந்து, முதல்வர் ரூ.3 ஆயிரம் உயர்த்தி கொடுத்தார். அதுமட்டுமல்ல, இந்த மன்றத்திற்காக ஆண்டு தோறும் ஒதுக்கப்பட்டு வந்த நிதி ரூ.3 கோடியாக இருந்தது, அரசு அமைந்த பிறகு ரூ.3 கோடி வருடத்திற்கு ரூ.4 கோடியாக உயர்த்தி கொடுத்தார்.சமீபத்தில், தமிழில் சிறப்பான கலை நூல்களை வெளியிடுகின்ற 5 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. எழுத்தாளர்களுக்கு வீடுகள், மறைந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு மணி மண்டபம் போன்றவற்றை அரசு தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. உங்களுடைய கலைகளை நீங்கள் உங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.

யூடியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற தளங்களில் உங்களுடைய கலைகளை நீங்கள் உலகறியச் செய்ய வேண்டும். கலை என்பது வெறும் பொழுது போக்காக மட்டுமல்லாமல், அது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். வாகை சந்திரசேகர், விஜயா தாயன்பன் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இயல், இசை, நாடக மன்றம் என்றைக்கும் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும். இங்கே பல்வேறு பிரிவுகளில் கலைமாமணி விருதுகளைப் பெற்றுள்ள அத்தனை கலைஞர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.