Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சீர்மிகு வழிகாட்டுதலின்படி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (21.07.2025) சென்னை, கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கல்லூரியில் பயிலும் 762 மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளையும், அக்கல்லூரிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 11 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருக்கோயில்களின் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 22,249 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் கொளத்தூர், திருச்செங்கோடு, விளாத்திக்குளம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் 02.11.2021 அன்று சென்னை, கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்து, அக்கல்லூரியில் பயிலும் 240 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார். இக்கல்லூரியில் B.Com., BBA, BCA, B.Sc. Computer Science, சைவ சித்தாந்தம் ஆகிய பட்டப்படிப்புகளும், ஓராண்டு சைவ சித்தாந்தம் பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டில் 480 மாணவ, மாணவியருக்கும், 2023-ஆம் ஆண்டில் 685 மாணவ, மாணவியருக்கும், 2024-ஆம் ஆண்டில் 748 மாணவ, மாணவியருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார். மேலும், 23.12.2024 அன்று இக்கல்லூரிக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, இன்று நடைபெற்ற அருள்மிகு கபாலீசுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்தாவது ஆண்டு தொடக்க விழாவில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, அக்கல்லூரியில் பயிலும் 762 மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளையும், அக்கல்லூரிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 11 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கி, விழாப் பேருரையாற்றினார். கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற 347 மாணவ, மாணவியர் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகிசிவம், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் செல்வி கவிதா ராமு, தமிழ்நாடு சேமிப்பு கிடங்குகள் நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், அருள்மிகு கபாலீசுவர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பி. விஜயகுமார் ரெட்டி, கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.