Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்லும் மாணவிகள்; இருபுறமும் வேகத்தடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: அரசு மேல்நிலை பள்ளி எதிரே சாலையின் இருபுறமும் வேக தடை அமைக்கவும், போக்குவரத்து காவலரை நியமிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி பேருந்தில் செல்கின்றனர். இந்நிலையில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே வி.எம். நகர் பகுதியில் இருக்கும் ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவர்கள் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுப்பம், மணவாளநகர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், கீழ் நல்லாத்தூர், ஈக்காடு, புல்லரம்பாக்கம், பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்தும் வந்து செல்கின்றனர். இவ்வாறு அரசு மற்றும் தனியார் பேருந்தில் வரும் மாணவிகள் திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் தலைமை தபால் நிலையம் அருகே இறங்கி சாலையை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றது. இதனால் சாலையை கடக்கும் மாணவிகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது.

இதனால் இப்பகுதியில் சாலையின் இரு புறத்திலும் வேகத்தடை அமைத்து காலை பள்ளிக்கு செல்லும் போதும் மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும் போக்குவரத்து காவலரை பணியில் அமர்த்தி விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.