Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை: தெரு விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் கிண்ணங்கள் அமைப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் வெப்பநிலை அதிகரித்து பறவைகள் மற்றும் தெரு விலங்குகளின் வழக்கமான நீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகிறது. இந்நிலையில் விலங்குகளுக்கு நீர் வழங்க பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் சென்னை நகர் முழுவதும் தண்ணீர் கிண்ணங்கள் அமைத்து வருகின்றன. முதல்கட்டமாக சென்னையில் 146 சிமென்ட் தண்ணீர் கிண்ணங்களை விலங்குகள் நல தன்னார்வலர்களுக்கு தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் விநியோகித்துள்ளது. இது குறித்து விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் கூறியதாவது: இந்த சீசனில் நாங்கள் 1,000 கிண்ணங்களை விநியோகிப்போம், இனி ஒவ்வொரு ஆண்டும் இதைச் செய்வோம், இந்த கிண்ணங்களிலிருந்து விலங்குகள் தண்ணீர் குடிக்கும் புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதனால் மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

கிண்ணங்கள் மாநிலம் முழுவதும் கிடைக்கின்றன, தேவைப்படுபவர்கள் தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை அணுகலாம். கிண்ணங்களை பெறுபவர்கள் சரியான நேரத்தில் தண்ணீரை மாற்ற வேண்டும், அவர்களே கிண்ணங்களை சுத்தம் செய்ய வேண்டும். புளூ கிராஸ் ஆப் இந்தியா நிறுவனம் 700க்கும் மேற்பட்ட சிமென்ட் தண்ணீர் கிண்ணங்களை நகரில் விநியோகித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 3,000 முதல் 4,000 கிண்ணங்களை புளூ கிரால் விநியோகிக்கிறது, இந்த முறை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மக்கள் கிண்ணங்களை சேகரித்துள்ளனர். மேலும் ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் இந்த கிண்ணங்களை வைக்குமாறு தனியார் நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாமல்லபுரம் மற்றும் படூரில் உள்ள அறம் செய்வோம் அறக்கட்டளை நாவலூர், சிறுசேரி, கழிப்பட்டு, படூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் தண்ணீர் தொட்டிகளை வைப்பதோடு, மரங்களிலும் தண்ணீர் கிண்ணங்களை அமைக்கிறது. பெரிய செவ்வக வடிவ சிமென்ட் கிண்ணங்கள் நாய்கள், பூனைகள் மற்றும் மாடுகளுக்கானவை, மேலும் அவை 20 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இவற்றில் விலங்குகளுக்கான தண்ணீர் கிண்ணங்களில், அகற்ற வேண்டாம் என ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப்பட்ட பலகை பொருத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.