Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரி, ஓசூரில் 16 பள்ளிகளில் ரூ.4.44 கோடி மதிப்பில் ஸ்டெம் கற்றல் மையங்கள்

*அமைச்சர் திறந்து வைத்தார்

ஓசூர் : கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ரூ.4.44 கோடி மதிப்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று ஓசூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, மையங்களை திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா, மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிக் கல்வித்துறை மற்றும் அமெரிக்கா இந்தியா அறக்கட்டளையின் கூட்டு முயற்சியின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 பள்ளிகளில் ரூ.4.44 கோடி மதிப்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.கூடுதலாக சமூக பொறுப்பு நிதியின் கீழ், பள்ளியில் எழுத்தறிவு பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை வெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் வழங்கியுள்ளது.

இந்த பங்களிப்பு மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்களின் தரம் மேம்படும். இந்தியா முழுவதும் 83 ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 33 மையங்கள், அதில் 16 மையங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால், இந்தியாவிலேயே கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, மாணவர்கள் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது. ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒவ்வொரு திறமைகள் உள்ளதால், அவர்களிடம் உள்ள திறமைகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுபிடித்து வெளிக்கொணர வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டார். இதன் மூலம் கவிதை, பாடல், ஓவியம் சார்ந்த போட்டிகளில் ஒரு கலையரசன், ஒரு கலையரசி தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறார்கள்.

இந்த கலைத்திருவிழா மாணவர்களின் திறமைகளை கண்டறிய ஒரு வாய்ப்பாக அமைகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை மாறி, தற்போது முன்னேறிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 18வது இடத்தையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21வது இடத்தையும் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு 5வது இடத்திற்கு முன்னேற தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது, நல்லது, கெட்டது சொல்லி தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, முதன்மை கல்வி அலுவலர்(பொ) முனிராஜ், அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் டிஜிட்டல் ஈக்வலைசர் திட்ட இயக்குநர் பாஸ்கரன் தீனதயாளன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், தாசில்தார் குணசிவா, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார், பள்ளி தலைமையாசிரியர் தேவசேனா, மாவட்ட கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.