Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடந்த ஆண்டை போல் 1,519 சிலைகள் வைக்க அனுமதி; விநாயகர் சதுர்த்திக்கு 16,500 போலீசார் பாதுகாப்பு: கட்டுப்பாடுகளை மீறி சிலை வைத்தால் கைது

சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், சிலைகள் வைப்பதற்கான இடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக போலீசார் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் பல்ேவறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி போலீசார் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த ஆண்டு 1,519 சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கியது போல் இந்த ஆண்டும் அதே இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பாளர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சிலைகள் நீதிமன்ற உத்தரவுப்படி 10 அடி உயரத்திற்கு மேல் இருக்க கூடாது, மருத்துவமனை அருகே சிலைகள் அமைக்க கூடாது. பிற மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஈடுபடுக்கூடாது என 12 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர போலீசார் இந்து அமைப்புகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், சிலைகள் அமைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களை சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 104 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து, பிரச்னை இல்லாத இடங்களாக தேர்வு செய்யப்பட்டு சிலைகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. சிலை அமைக்கப்பட்ட இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு சிலை அமைப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வேண்டும் என்றே சிலைகள் அமைக்க முயற்சிகள் எடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பை பொறுத்தவரை சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நாள் முதல் நீர்நிலைகளில் கரைக்கும் நாள் வரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 16,500 காவலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல்படையினர் பாதுபாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

3 நாட்கள் கரைக்க ஏற்பாடு: சென்னையில் பிரதிஷ்டைக்காக வைக்கப்படும் சிலைகள் வரும் 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்கப்பட வேண்டும். சென்னையில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்களை போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கிரேன்கள், படகுகள் உதவியுடன் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.