Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊழியர்களின் பாதுகாப்புக்காக 100 மீட்டர் முன்பே மின்னழுத்தத்தை கணிக்கும் புதிய கருவி அறிமுகம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின்சார ஊழியர்களின் பாதுகாப்புக்காக மின்னழுத்தத்தை 100 மீட்டர் முன்பே கணிக்கும் கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வீடுகள், கம்பங்கள், மின்மாற்றிகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மின்வாரிய தொழிலாளர்கள் நேரில் சென்று அந்த பிரச்னைக்கு தீர்வு காண்கின்றனர். மின் தொழிலாளர்கள் மின் கம்பங்களில் ஏறுவது, மின் கம்பிகளை பழுது பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த பழுதுபார்க்கும் பணிகளின் போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மின் அழுத்தம் எவ்வளவு இருக்கும் என்பதை 100 மீட்டர் முன்பே கண்டுபிடிக்கும் புதிய கருவியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்னழுத்ததைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் இந்த புதிய கருவிகளில் ஒயர்கள் மூலம் இணைப்பு கொடுத்து மின்னழுத்தத்தைக் கண்டுபிடிக்க இயலும். அதேநேரத்தில் இந்தக் கருவி 100 மீட்டர் தூரத்திற்கு முன்பே மின்னழுத்ததை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். மேலும் சிவப்பு நிற லைட்டும், பீப் சத்தம் எழுப்பி ஊழியர்களை அந்த கருவி அலர்ட் செய்து விடும். இந்த கருவியில் பல்வேறு வோல்டேஜ்களை செட் செய்து கொள்ள முடியும். இருப்பினும் 230 கிலோவாட் என்பது இயல்பான அளவீடாக இடம் பெற்றிருக்கும். அனைத்து விதமான மின் கம்பிகளிலும் வோல்டேஜ் நிலவரத்தை கண்டறிந்து சரியாக சொல்லி விடும். இந்த கருவி தொடர்ச்சியாக 50 மணி நேரம் வரை இயங்கும். இதன் விலை ரூ.650. இந்த கருவி மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

அதிக வோல்டேஜ் இருந்தால் அதில் கை வைக்காமல் உடனே உஷாராகி விடலாம். மேலும் அவசர அவசரமாக வேலையை செய்து முடிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. வோல்டேஜ் உறுதி செய்யப்பட்டதும் சட்டென எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டு மாற்று நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம். இந்த கருவி களப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் படிப்படியாக வழங்கப்படும். இது சிறிய கருவியாக இருப்பதால் கைகளில் வாட்ச் போன்று அணிந்து கொள்ளலாம். அல்லது ஹெல்மெட்களில் பொருத்திக் கொள்ளலாம். மின்வாரிய ஊழியர்கள் பணி என்பது சற்று ஆபத்தான பணியும் கூட. இந்நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே செயலி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.